மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுவோர் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- மத்திய மந்திரி..!!மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுவோர் வாக்குரிமையை பறிக்க வேண்டும்- மத்திய மந்திரி..!!
ஐ.நா.சபை அறிக்கையின்படி அடுத்த ஆண்டு சீனாவை தாண்டி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றி, மதம் அல்லது சமூகத்தை பொருட்படுத்தாமல் அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ் சிங் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது: நம்மிடம் குறைவான வளங்களே உள்ளதால், மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டத்தை அமல்படுத்துவது மிகவும் முக்கியமானது. சீனா ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்தி அதன் மூலம் வளர்ச்சியை அடைந்துள்ளது. 1978ல் இந்தியாவை விட ஜிடிபியில் குறைவாக இருந்த சீனா, ஒரு குழந்தை கொள்கையை ஏற்று கொண்டு, கிட்டத்தட்ட 60 கோடி அளவுக்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சி அடைந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. சீனாவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் பிறக்கின்றன, இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் பிறக்கின்றன, நாம் எப்படி சீனாவுடன் போட்டியிட முடியும்?. மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா அவசியம். இந்த மசோதாவை மதம் பாராமல் அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும். இந்தச் சட்டத்தைப் பின்பற்றாதவர்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் வழங்கக் கூடாது. அவர்களது வாக்குரிமையும் திரும்பப் பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.