;
Athirady Tamil News

பெண்கள் குறித்து பேசிய கருத்தால் வெடித்தது சர்ச்சை… மன்னிப்பு கேட்டார் ராம்தேவ்..!!

0

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த வாரம், மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ், ‘பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்… அதேபோல் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்’ என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தபோது, ராம்தேவ் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ராம்தேவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

ராம்தேவிடம் விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணைய தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ராம்தேவ் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தனது கருத்து தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து, மகாராஷ்டிர மகளிர் ஆணையத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “பெண்கள் சமூகத்தில் மரியாதைக்குரிய இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும், பெண்களை மேம்படுத்துவதற்காகவும் உழைத்து வருகிறேன்.

பெண்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோ முழுமையானது இல்லை. இருப்பினும், எனது கருத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மிகவும் வருந்துகிறேன். எனது கருத்தால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.