;
Athirady Tamil News

இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக கைவினை கலைஞர்கள் திகழ்கின்றனர்: குடியரசு துணைத்தலைவர்..!!

0

நாட்டின் மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சில்ப் குரு விருது உள்பட 78 தேசிய விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. டெல்லியில் மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் வி.பன்னீர்செல்வம், 2019ஆம் ஆண்டுக்கான சில்ப் குரு விருதைப் பெற்றார். புதுச்சேரியைச் சேர்ந்த கே.வெங்கடேசன், டெரக்கோட்டா வேலைப்பாட்டுக்காகவும், மாசிலாமணி, ஷோலாபித் வேலைப்பாட்டுக்காகவும், 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். விருது பெற்றவர்களில் 36 பேர் பெண்கள். சில்ப் குரு விருதுடன் தங்க நாணயம், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசு, தாமிரப்பத்திரம், சால்வை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய தன்கர் கூறியுள்ளதாவது:

முன் எப்போதும் காணாத வகையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. உலக அளவில் முதலீடுகளுக்கு உகந்த இடமாக இந்தியா உள்ளது. கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் தொடர்புடைய கைவினைஞர்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். கலைஞர்களின் அரிய திறன்கள் இந்தியாவை பெருமிதம் கொள்ள வைக்கின்றன. கைவினைஞர்கள் நமது கலாச்சாரத்தின் சின்னமாக திகழ்கின்றனர். இந்தியா, அளவில்லாத திறன்களைக் கொண்டுள்ளது என்பதை உலகிற்கு அவர்கள் பறை சாற்றுகின்றனர். ஜி-20 அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்பதன் மூலம், பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வையை உலகம் கவனிப்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த தசாப்தத்தின் முடிவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக நிச்சயம் உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.