பத்தாவது இடத்தில் இருந்த பொருளாதாரம்- மன்மோகன் சிங்கை கேலி செய்த மோடி..!!
குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில். ராஜ்கோட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: 2014 ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி ஏற்கும் முன், 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, புகழ்பெற்ற பொருளாதார வல்லுனர் (மன்மோகன் சிங்) நமது பிரதமராக இருந்தார். இந்திய பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுகளில், அவர்கள் என்ன செய்தாலும், இந்தியப் பொருளாதாரம் பத்தாவது இடத்திற்கு மாறியது. இதன் மூலம் 11வது இடத்தில் இருந்த இந்தியா பொருளாதாரம், 10வது இடத்தைப் பெற பத்து ஆண்டுகள் ஆனது.
2014-ல் நீங்கள் ஒரு சாய்வாலாவுக்கு (டீ விற்பவர்) ஆட்சியைக் கொடுத்தீர்கள். நான் ஒரு பொருளாதார நிபுணர் என்று ஒரு போதும் கூறவில்லை. ஆனால், மக்களின் பலம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியது. 11வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (காங்கிரஸ்) ஆட்சியையும், 10வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தை அடைய எட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட (பாஜக) ஆட்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.