நஞ்சன்கூடுவில் வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்..!!
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார். அவர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒக்கலிக சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசியல் அமைப்பு சட்டப்படிதான் முடிவு எடுக்க முடியும். இதில் யாரும் அரசுக்கு கெடு விதிக்க முடியாது. இதுபோல் மற்ற சமுதாயத்தினரும் இடஒதுக்கீடு கேட்கிறார்கள். இதுபற்றி ஆராய்ந்து அரசிடம் பரிந்துரைக்க குழு அமைக்கப்படும்.
புழுங்கல் அரிசி
இணையதளங்கள் மூலமாக போலி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள் அட்டை ஆகியவற்றை மக்கள் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்படும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு புழுங்கல் அரிசி வழங்கப்படுகிறது. அந்த மக்கள் அதைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் அந்த மாவட்ட மக்களுக்கு மட்டும் புழுங்கல் அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் புழுங்கல் அரிசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
அதையடுத்து அவர் நஞ்சன்கூடுவுக்கு காரில் சென்றார். நஞ்சன்கூடுவை சென்றடைந்த அவர் அங்கு பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதையடுத்து அவர் மைசூரு கலா மந்திராவில் நடந்த மைசூரு மை கம்பெனியின் 75-வது அம்ருத மகோத்சவ் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் மைசூரு மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதன்பின்னர் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் 10 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.