;
Athirady Tamil News

ஸ்ரீஹரிகோட்டாவில் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார்..!!

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள 2 ஏவுதளங்களில் இருந்து விண்வெளிக்கு செயற்கைகோள்களை ராக்கெட்டில் பொருத்தி அனுப்பி வருகிறது. இந்த நிலையில், விண்வெளித்துறையிலும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியின் உத்தரவை ஏற்று, இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக கடந்த 18-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவி சாதனை படைத்து உள்ளது. ஏவுதளம் திறப்பு இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த மற்றொரு விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ‘அக்னிகுல் காஸ்மோஸ்’, ஐ.ஐ.டி.-மெட்ராஸ் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தை உருவாக்க தொடங்கியது. தற்போது இந்தப்பணி நிறைவடைந்த நிலையில், தனியார் ஏவுதளத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்துவைத்து பார்வையிட்டார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ‘ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை விண்வெளி நிறுவனம் வரவேற்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்வெளி சீர்திருத்தங்களில், ராக்கெட்டுகளை தயாரிப்பதற்காக மட்டும் அல்லாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் தனியாரை ஊக்குவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதால், தனியார் நிறுவனத்தினர் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. புதிய ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் மாதம் தனியார் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றார். மத்திய அரசுக்கு பெருமை இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:- ‘தனியார் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் சவுண்டிங் ராக்கெட் வளாகத்தை பயன்படுத்தவோ அல்லது பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஏவுதளங்களை பயன்படுத்தவோ முடியாது. ஏனெனில் அவற்றின் பிரமாண்டமான அளவு அக்னிபான் ராக்கெட்டுக்கான காப்புரிமை பெற்ற செமி கிரையோஜெனிக் எஞ்ஜின் பயன்படுத்துகிறது. அத்துடன் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தில் அவை அமைந்து உள்ளது. தனியார் விண்வெளி ஏவுகணை வாகனங்களை மேம்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை திறந்துவிட்டதால், தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு இந்த துறையில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டதற்கான பெருமை மத்திய அரசையும், இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸ் நிறுவனங்களை சேரும்’ என்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.