தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து தேர்வுக்குழு தலைவர் சர்ச்சை கருத்து… மன்னிப்பு கேட்க சொன்ன இஸ்ரேல் தூதர்..!!
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் திரையிடப்பட்டதற்கு, தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், கடும் அதிருப்தி தெரிவித்தார். ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது’ என அவர் கூறினார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழுவின் நாடவ் லேபிட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‛உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும்’ என தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் அக்னிஹோத்ரி பதில் அளித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இயக்குநர் நாடவ் லேபிட்டை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் இன்று பகிரங்கமாகக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக நோர் கிலோன், நாடவ் லேபிட்டுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியருப்பதாவது:- இந்திய கலாச்சாரத்தில் விருந்தாளியை கடவுள் போன்றவர் என்கிறார்கள். திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் உபசரிப்பையும் நீங்கள் மிகவும் மோசமாகு துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்.
இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும். இதுபோன்ற கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். எந்த நியாயமும் இல்லை. இது இங்குள்ள காஷ்மீர் பிரச்சினையின் உணர்வுகளை காட்டுகிறது, Ynet-க்கு நீங்கள் அளித்த நேர்காணலில் இருந்து, தி காஷ்மீர் பைல்ஸ் மீதான உங்கள் விமர்சனத்திற்கும், இஸ்ரேலிய அரசியலில் என்ன நடக்கிறது என்பதில் உங்கள் அதிருப்திக்கும் இடையே உள்ள தொடர்பு தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். மேலும், இந்தியா-இஸ்ரேல் உறவுகள் மிகவும் வலுவானவை என்றும், நாடவ் லேபிட்டின் கருத்துகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் என்றும் தூதர் நோர் கிலோன் ட்வீட் செய்துள்ளார்.