மலப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள் உள்பட 160 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு..!!
கேரளாவில் மலையோர மாவட்டங்களில் தட்டம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டது. இதில் தட்டம்மை நோய் இருப்பது உறுதியானது. நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் அங்கு நோய் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதற்கிடையே மாநிலம் முழுவதும் தட்டம்மை நோய் பாதிப்பு குறித்து சுகாதார குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 160 பேருக்கு தட்டம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
குழந்தைகள், பெண்கள் உள்பட பலருக்கும் இந்த பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கேரளாவில் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தட்டம்மை நோய் கண்டறியப்பட்ட தகவல் மத்திய சுகாதார குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மலப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மத்திய சுகாதார குழு கேரளா வர உள்ளதாக கூறப்படுகிறது.