நவம்பர் மாத பணவீக்கமும் வீழ்ச்சி !!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (30) தெரிவித்தது.
செப்டெம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் ஒக்டோபரில் 66 சதவீதமாக குறைவடைந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதத்தில் 85.6 சதவீதமாக காணப்பட்ட உணவுப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 73.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், உணவு அல்லாத பிரிவில் ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படும் பணவீக்கம் ஒக்டோபரில் 56.3% ஆக காணப்பட்டதுடன், நவம்பரில் 54.5% ஆக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2021 அக்டோபரில் இருந்து மேல்நோக்கிய போக்கைப் பின்பற்றிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், கடந்த ஒக்டோபரில் முதல் தடவையாக கீழ்நோக்கிய போக்கைக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட முதன்மைப் பணவீக்கம், செப்டெம்பரில் 73.7 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஓகஸ்டில் 70.6 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.