இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை ஜனாதிபதி ரணில் வழங்க வேண்டும் – சமாச தலைவர் லோகநாதன்!!
இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கான சுயாட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் என்று அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
வீரமுனை ஐங்கரன் மகளிர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் மாதாந்த பொது கூட்டம் அதன் தலைவர் எஸ். யு. செசலியா தலைமையில் இடம்பெற்றது.
இதில் பேராளராக கலந்து கொண்டு பேசியபோது சமாச தலைவர் லோகநாதன் மேலும் தெரிவித்தவை வருமாறு
தமிழர் தரப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். இதை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் முன்னைய தலைவர்களால் கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். எனவே பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருப்பதோடு மட்டும் நின்று விட வேண்டாம் என்று ஜனாதிபதியை கேட்டு கொள்கின்றோம்.
வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சியையே தமிழ் மக்கள் கோரி வந்துள்ளனர். அதற்காகவே போராடினர். அதில் இப்போதும், எப்போதும் உறுதியாக உள்ளனர்.மாகாண சபைகள் செயல் இழந்து கிடக்கின்றன. மாகாண சபைகளின் நிர்வாகம் குழம்பி கிடக்கின்றது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இத்தருணத்தில் இணைந்த வடக்கு, கிழக்கில் சுயாட்சியுடன் கூடிய இடைக்கால நிர்வாகத்தையேனும் தமிழ் மக்களுக்கு வழங்குங்கள் என்று ஜனாதிபதியை கோரி நிற்கின்றோம். மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இதுவே கூட்டுறவு துறையின் நோக்கமும் ஆகும்.
வடக்குக்கும், கிழக்குக்கும் இடையிலான உறவு பாலத்தை கூட்டுறவு மூலமாக கட்டி எழுப்ப வேண்டும் என்பதில் நாம் பற்றுறுதியாக உள்ளோம். அதற்காக எதிர்காலத்தில் இரு மாகாணங்களையும் சேர்த்த கூட்டுறவு சம்மேளனத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
மேலும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பது கூட்டுறவு முறையின் அடிநாதம் ஆகும். அம்பாறை மாவட்டத்தில் இன அழிப்பு செய்யப்பட்ட வீரமுனை போன்ற தமிழ் கிராமங்களில் மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்பதில் நாம் பற்றுறுதியாக உள்ளோம்.
எமது வேலை திட்டங்களுக்கு உதவி செய்ய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராக உள்ளன. அதே போல தமிழ் அமைச்சர்களின் சேவைகளையும் நாம் பெற்று தருவோம். 2023 ஆம் ஆண்டில் கூடுதல் நன்மைகளையும், அதிக வரப்பிரசாதங்களையும் எமது மக்களுக்கு பெற்று தர கூடியதாக இருக்கும் என்று சமாசம் நம்புகின்றது என்றார்.