;
Athirady Tamil News

பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம்!!

0

பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

90 வருடங்களாக இரண்டு வீதத்தை 5 வீதமாக மட்டுமே உயர்த்தியுள்ளோம். எமது அரசியல் முறைமை இப்படித்தான் இருக்கிறது. ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்க்கட்சியில் இருந்தும் எமக்கு இதனை செய்ய முடியாமல் போனது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமக்கு இரண்டு வீத பெண் பிரதிநிதித்துவம் இருக்கும்போது ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில்கூட அந்த இரண்டு வீதம் இருக்கவில்லை.

எமது சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள். பாராளுமன்றத்தில் 5.3 வீதமான பெண் பிரதிநிதிகளே இருக்கின்றனர். இங்குதான் பிரதான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பணிகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற பெண்கள் கூட்டமைப்பிற்கு பொறுப்பு கொடுத்தேன். விசேடமாக, பாலினம், சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கான கொள்கைகளை வகுக்குமாறு அறிவுறுத்தினேன். சட்டம் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு மற்றும் பெண்கள் உரிமை, பாலினம், சமத்துவம், ஆகிய விடயங்களுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக பாலினம் சமத்துவம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான பங்களிப்புச் செய்வதற்கு பாராளுமன்றத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

அதிகாரத்துடன் கூடிய தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்க வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.