மூன்றாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை !!
சுவிஸ் அருள்மிகு சிவன் கோவில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பினால் வரம்புயர மரநடுகை செயற்திட்டத்தின் முதலாம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் சோ.இளங்கோவன் மற்றும் அன்பே சிவம் அமைப்பின் தொண்டரான இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹைதரலி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு மா, பலா, தென்னை, முந்திரிகை, தோடை போன்ற மரங்களை நடுகை செய்தனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனர்த்தங்களினால் அழிந்து வரும் மரங்களை உருவாக்கும் நோக்கில் அன்பே சிவம் அமைப்பினால் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வரம்புயர மரநடுகை திட்டத்தின் மூலம் இதுவரை வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் 32000 க்கு மேற்பட்ட மரங்களை நடுகை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.