விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரம்: முன்னாள் டி.ஜி.பி. உள்பட 4 பேரின் முன்ஜாமீன் ரத்து..!!
இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது. நீதிபதிகள் கூறும்போது, மேல் முறையீடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என்றனர்.