ஐதராபாத்தில் துப்பாக்கி சூடு நடத்தி நகைக் கடையில் கொள்ளை: 4 பேர் கும்பல் அட்டூழியம்..!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாகோல், சினேகாபுரியில் ராஜஸ்தான் மாநிலம் பாலிய சேர்ந்த கல்யாண் சவுத்ரி என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். செகந்திராபாத்தை சேர்ந்தவர் சுக் தேவ். நகை மொத்த வியாபாரியான இவர் நகைக்கடைகளுக்கு நகை சப்ளை செய்து வருகிறார். சுக்தேவ் வியாழக்கிழமை தோறும் கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்கு நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இவர் நகை சப்ளை செய்வதை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சுக் தேவ் நேற்று இரவு வழக்கம்போல் நகைகளை கல்யாண் சவுத்ரி கடைக்கு கொண்டு வந்தார். நகைகளை சவுத்ரி சரி பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது 3 வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கிக் கொண்டு இருந்தனர். இரவு 10 மணி அளவில் 2 பைக்கில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கடைக்கு சிறிது தூரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு 2 பேர் அங்கேயே நின்று கொண்டனர். 2 வாலிபர்கள் மட்டும் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு திடீரென கல்யாண் சவுத்ரியின் நகைக்கடைக்குள் புகுந்தனர். அவர்கள் இரண்டு பேரும் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து மிரட்டி கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு கடையின் ஷட்டரை மூடினர். பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை பணத்தை கல்யாண் சவுத்ரியிடம் கேட்டனர். இதனைக் கண்ட கடையில் இருந்த ஊழியர்கள் அங்கு இருந்த அறைகளுக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். கல்யாண் சவுத்ரி மற்றும் சுக் தேவ் ஆகியோர் நகை பணத்தை தர மறுத்ததால் அவர்கள் மீது வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கல்யாணி சவுத்ரி மார்பில் 3 துப்பாக்கி குண்டுகளும், சுக் தேவ் மூக்கின் மீது ஒரு துப்பாக்கி குண்டும் பாய்ந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர். துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் வெளியே நின்று கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர். அப்போது வாலிபர்கள் நகை பணத்துடன் வெளியே வருவதை கண்ட அவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். தங்களை பிடிக்க முயற்சி செய்தால் துப்பாக்கியில் சுட்டு விடுவதாக வாலிபர்கள் மிரட்டுதால் யாரும் அவர்களை நெருங்க வில்லை. இதையடுத்து நகை பணத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் தயார் நிலையில் இருந்தவர்களுடன் தப்பி சென்றனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரச்ச கொண்ட கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதிர் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கொள்ளையர்களை பிடிக்க ஐதராபாத் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் நகைக்கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 15 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.