நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் தற்போது பேசப்படும் விடயங்கள் பெறுமதியற்றவைகள் – செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன்!!
தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது. அதேவேளை நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும் யாழ் மக்களின் பிரதான வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதேவேளை வைத்தியர்கள் மருந்துகளை வெளியே வாங்குமாறு எழுதிக் கொடுக்கின்றனர். அதேவேளை வெளி மருந்தகங்களில் மருந்துகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. வைத்தியசாலை தரப்பினர் இது தொடர்பில் அறிவித்திருக்கின்றனர். அதேவேளை நாட்டு மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்களில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சமூக நிறுவனங்களினூடாகவோ இந்த புற்றுநோய் வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் அவலநிலையை இன்னும் போக்கியதாக தெரியவில்லை.
எங்களை பொறுத்தவரையில் பல்வேறு சமய நிறுவனங்களினூடாக குறித்த வைத்தியசாலைக்கு இலட்சக்கணக்கான ரூபா செலவில் மருந்துப்பொருட்களை வழங்கி வருகின்றோம்.
எனவே தயவு செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் தரப்பினர் நேரடியாக குறித்த இடங்களுக்கு சென்று அங்குள்ள விடயங்களை ஆராய்ந்து அக்கறை செலுத்த வேண்டும்.
எனவே உடனடியாக எமது மக்கள் பிரதிநிதிகள் யாழிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று அடிப்படைத் தேவையான மருந்து விபரங்களை எடுத்து தங்களது சிறப்புரிமைகளை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரங்களின் ஊடாக உடனடியாக மருந்து உதவியை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை இந்தவிடயம் தொடர்பில் புலம்பெயர் சமூகம் உதவி செய்ய காத்திருக்கின்றனர். இது தொடர்பில் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படவேண்டும்.
மேலும் நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் தற்போது பேசப்படும் விடயங்கள் பெறுமதியற்றவைகள். நாடாளுமன்ற உரைகளினூடாக எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே மக்கள் பிரதிநிதிகள் நோயுற்ற துன்பப்படும் மக்கள் மத்தியில் நேரில் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்கவேண்டும்.
சேலைனுக்கு கூட இன்று தட்டுப்பாடு வரவுள்ளது. இந்நிலையில் யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலை தரப்பினர் கூறும் போது இதுவரை வேறுவொரு மக்கள் பிரதிநிதிகளும் மருந்து கொண்டுவந்து தரவில்லை என்கின்றனர். அதேவேளை சைவசமய நிறுவனங்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.
எனவே சகல மக்கள் பிரதிநிதிகளிடமும் வேண்டிக்கொள்வது என்னவென்றால் குறித்த வைத்தியசாலைகளுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராயுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.