அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் 341 பெண் மாலுமிகள் இணைப்பு..!!
இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என மத்திய அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ராணுவம் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்திய கடற்படையில் முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னிவீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 341 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவார்கள். அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் பெண் மாலுமிகள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்கள் பெறும் அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். கப்பல்கள், விமான தளங்கள், விமானங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். ஒரு மாலுமிக்கு அளிக்க கூடிய அதே பயிற்சி முறைகள் அவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முறையில் எந்தவித வேற்றுமையும் இருக்காது. ஒரு தனிநபரின் திறமையை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். இதுதவிர, பாலின சமத்துவ கடற்படையாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் பார்க்கிறோம். அடுத்த ஆண்டில் இருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம். இதுவரை 7 முதல் 8 பிரிவுகளில் மட்டுமே அவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.