ராகுல்காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் பர்வானி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கனஸ்யாவில் உள்ள பழங்குடியினருக்கான தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ராஜேஷ் கண்ணோஜ், முக்கியமான வேலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் அவர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டதாகவும், பழங்குடியினர் விவகாரத் துறையின் உதவி ஆணையர் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கான சேவை நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரகுவன்ஷி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ராஜேஷ் சஸ்பெண்ட் உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தற்போது இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மாநில காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் மிஸ்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிவராஜ் சிங் சவுகான் அரசு, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் பங்கேற்க அனுமதித்துள்ளது, ஆனால் பழங்குடியினரான ராஜேஷ் கண்ணோஜ், அரசியல் சாராத அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்