யார் சிறந்த இந்து என்பதில் மோடியுடன் போட்டி போடும் எதிர்க்கட்சிகள்- அசாதுதீன் ஒவைசி விமர்சனம்..!!
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இன்று ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் யார் சிறந்த இந்து என்பதை காட்டிக் கொள்வதில் பிரதமர் மோடியுடன் போட்டி போட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது. அது டெல்லி முதல்வராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது சமாஜ்வாதி கட்சி அல்லது ராஷ்டிரிய ஜனதாதள கட்சியாக இருந்தாலும், இதை காட்டிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும், வெறுப்புடன் சேர்ந்து வெறுப்பை எதிர்த்துப் போராடுகிறார்கள். இதன் மூலம் பாஜக தேர்தலில் வெற்றி பெறுகிறது. பாஜக ஏன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறது என்பது குறித்து ராகுல் காந்தி அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜெய் சியா ராம் குறித்தும் அவர் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸுக்கு இதுபோன்ற அறிக்கைகள் வருவது சகஜம், ராகுலின் இது போன்ற கருத்து எனக்கு ஆச்சரியமாக இல்லை, நேரு பிரதமராக இருந்தபோது பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டன. பாபர் மசூதி வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டபோது, ராகுலுடையது தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். பாபர் மசூதி உடைக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். எனவே, காங்கிரசார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது இயல்பானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.