இரண்டாம் கட்ட தேர்தல் – குஜராத்தில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு
குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கிடையே, இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்தி நகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடைபெற உள்ள 93 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குஜராத்தைப் பொறுத்தவரை இதுவரை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது. வரும் 8-ம் தேதி ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.
\