ராமர் கோவிலுக்கு ரூ.1,000 கோடியில் சாலை வசதி; யோகி ஆதித்யநாத் அரசு ஒப்புதல்..!!
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமபிரான் பிறந்த இடத்தில் அவருக்கு பிரமாண்ட கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. 3 தளங்களுடன் 161 அடி உயரம் கொண்ட இந்த ேகாவில் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அயோத்தியை சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் இருந்து ராமர் கோவிலை எளிதாக அடையும் வகையில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1,000 கோடியில் மெகா திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.நிலம் கையகப்படுத்தல், குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்களின் மறுவாழ்வு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்துக்கு உத்தரபிரதேச அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் மூலம், ராம ஜென்மபூமிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, ராமபிரானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அழகிய சூழல் உருவாக்கப்படும்’ என்று கூறினார்.இதில் முக்கியமாக, சுக்ரீவா கோட்டையில் இருந்து ராம ஜென்மபூமி வரையான 566 மீட்டருக்கு பக்தர்களின் வசதிக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஜென்மபூமி பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.83.33 கோடிக்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்து இருப்பதாக அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.