;
Athirady Tamil News

பெங்களூரு எசரகட்டாவில் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி பாதுகாக்கப்படுமா..!!

0

விலங்குகளின் உறைவிடம்
புவி பரப்பில் வனம் மற்றும் வனம் சார்ந்த பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காடுகள் மனித வாழ்க்கைக்கு அவசியமானது. ஏனென்றால் காடுகள் இல்லையெனில் நமக்கு தேவையான அளவில் மழை பொழிவு இருக்காது. அதனால் வனத்தை சார்ந்து மனித சமூகம் இருக்கிறது. மேலும் வனம், விலங்குகளின் உறைவிடம் ஆகும். காடுகள் பாதுகாக்கப்படும்போது, விலங்குகளின் இருப்பிடம் மட்டுமின்றி சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மக்கள் வசிக்கும் பகுதிகள் அதிகரிப்பு போன்றவற்றால் நடப்பு 21-ம் நூற்றாண்டில் வனங்கள் பரப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மத்திய-மாநில அரசுகள், வன வளத்தை பாதுகாக்க பல்வேறு வன சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனாலும் மனித சமூகத்தின் பேராசை, எதிர்காலத்தை பற்றிய கவலை இல்லாமை போன்றவற்றால் காடுகளை பாதுகாப்பது என்பது அரசுகளுக்கு சவாலாகவே உள்ளது. வனங்கள் அழிக்கப்படுவதால், மனிதர்கள் அதன் பின்விளைவுகளை சந்தித்து வருகிறார்கள்.

வனங்கள் அழிப்பு
முக்கியமாக கொரோனா என்ற மிகப்பெரும் உயிர்க்கொல்லி வைரசின் அச்சுறுத்தலை மனித சமூகம் எதிர்கொண்டது. இன்னமும் எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற கொடிய வைரஸ் உருவாவதற்கு வனங்கள் அழிப்பும் ஒரு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. நாம் இன்னும் கொரோனாவின் பிடியில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஆனால் கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்புகள் நமது கண்முன் வடுகளாக காட்சி அளிக்கின்றன. வனங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வனம் சார்ந்த புல்வெளி பரப்பை பாதுகாப்பது தொடர்பான விவகாரம் தற்போது பெங்களூருவில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. அது எசரகட்டா புல்வெளி பகுதி. வாருங்கள், கீழே அதுபற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

பொழுது போக்கு அம்சங்கள்
பெங்களூருவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் எசரகட்டா பகுதி உள்ளது. அங்கு 5 ஆயிரத்து 10 ஏக்கரில் புல்ெவளிகள், மரங்கள் நிறைந்த நிலம் உள்ளது. இது முழுமையான வனம் அல்ல, ஆனால் வனம் சார்ந்த பகுதி ஆகும். அவை முழுவதும் அரசு நிலம் ஆகும். அந்த நிலத்தில் 356 ஏக்கருக்கு புல்வெளி, 1, 000 ஏக்கரில் புதர்கள், ஆயிரத்து 912 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய நீர் நிலை இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள நிலத்தில் பசுமை போர்த்திய புல்வெளி பரப்பு இருக்கிறது. அது கண்களுக்கு பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது.

இந்த நிலப்பரப்பில் பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு எசரகட்டா புல்வெளி பகுதிகளை உள்ளடக்கிய 5 ஆயிரத்து 10 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு கோரி ஒரு வரைவு அறிக்கை கர்நாடக வன உயிரினங்கள் வாரியம் சார்பில் முதல்-மந்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கையை எடுத்த எடுப்பிலேயே எடியூரப்பா நிராகரித்துவிட்டார். எலகங்கா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத், அந்த வரைவு அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் எடியூரப்பா இந்த முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது.

கருத்து கேட்பு
இதற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சீதாராம், மகேஷ்பட், சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எசரகட்டா புல்வெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் அந்த புல்வெளி பகுதியில் தற்போதையே நிலையே நீடிக்க வேண்டும் என்றும், அங்கு எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்றும் ஐகோர்ட்டு கூறியது.

இந்த எசரகட்டா நீர்நிலை, அர்க்காவதி ஆற்று பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எசரகட்டா புல்வெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமா? என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை கேட்கும்படி வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எசரகட்டா புல்வௌி விஷயத்தில் முடிவு எடுப்பதற்கு முன்பு அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் விருப்பம் என்ன என்பதை அறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வியாபார நடவடிக்கைகள்
இதுகுறித்து பெங்களூரு பசவேஸ்வராநகரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கே.சி.சிங் கூறுகையில், “எசரகட்டாவில் 5 ஆயிரத்து 10 ஏக்கர் புல்வெளி பகுதி உள்ளது. அந்த இடத்தை நானும் நேரில் சென்று பார்வையிட்டேன். பெங்களூருவுக்கு அருகே மிக அழகான அந்த பகுதியை பாதுகாப்பது அவசியம். அங்கு பூங்கா அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. பூங்கா அமைத்தால், அடுத்து வரும் நாட்களில் அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் அங்கு வியாபார நடவடிக்கைகளை தொடங்கி விடுவார்கள். அதனால் அந்த புல்வெளிக்கு பாதிப்பு ஏற்படும். மாறாக அங்கு வசிக்கும் மக்களுக்கு வேலை அளிக்கும் வகையில் அதில் உள்ள ஏரியில் படகு சவாரி போன்ற வசதிகளை செய்யலாம். அங்கு மக்கள் வந்தாலும், அந்த புல்வெளி பகுதிக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்றார்.

இந்த புல்வெளி பகுதியை பாதுகாக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளவர்களில் ஒருவரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும், வன காடுகளை படம் பிடிக்கும் புகைப்பட கலைஞருமான மகேஷ் பட் கூறும்போது, “எசரகட்டா புல்வெளி பகுதியில் பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. பெங்களூருவில் லேசான மழை பெய்தாலே அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. எசரகட்டா பகுதியில் 60 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் எந்த பிரச்சினையும் இன்றி அந்த நீர் அங்குள்ள ஏரியில் சேருகிறது. எந்த வெள்ள பாதிப்பும் ஏற்படுவது இல்லை. காலநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் எசரகட்டா புல்வெளியை பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்றார்.

கவனம் செலுத்தவில்லை
பெங்களூருவை சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் சந்தீப் அனுருத்தன் கூறுகையில், “பெங்களூரு அருகே 5 ஆயிரம் ஏக்கரில் புல்வெளி நிலம் உள்ளது. இதை கபளீகரம் செய்ய முயற்சி நடக்கிறது. இதுபோன்ற புல்வெளி நிலங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆனால் அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்தவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கையை அமல்படுத்த முடியாது என்று அரசு சொல்கிறது. இப்படி வன பகுதிகளை, புல்வெளி பகுதிகளை நாம் பாதுகாக்க தவறினால் வரும் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை மனித சமூகம் எதிர்கொள்ளும். அதனால் எசரகட்டா புல்வெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்றார். பெங்களூரு ஜெயநகரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அக்‌ஷய் ஹெப்பிலிகர் கூறுகையில், “பெங்களூரு அருகே 5 ஆயிரம் ஏக்கரில் புல்வெளி நிலம் உள்ளது. அதை தற்போது எப்படி உள்ளதோ அதே நிலையில் காக்க வேண்டியது அவசியம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த புல்வெளி பகுதியில் சிறுத்தைகள் இருந்தது. பெங்களூருவுக்கு அருகில் உள்ள மிக முக்கியமான நீர்நிலை ஆகும். அதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலே உள்ளது. அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அரசு முயற்சி செய்கிறது. அவ்வாறு பணிகளை மேற்கொண்டால் அந்த புல்வெளி நிலத்தை ஆக்கிரமித்து விடுவார்கள். இதனால் நீர் நிலைக்கு வரும் மழைநீர் நின்றுவிடும். அந்த பகுதி வறண்டுவிடும். அதனால் அரசு அந்த புல்வெளி நிலத்தை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

காப்பாற்ற வேண்டும்
பெங்களூருவை சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் வினய் கூறுகையில், “பெங்களூருவுக்கு அருகில் உள்ள மிகப்பெரிய சுவாச பகுதியாக அந்த புல்வெளி நிலம் உள்ளது. அதை அரசு காப்பாற்ற வேண்டும். அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் அந்த பகுதி கட்டிடங்களாக மாறிவிடும். அதனால் அங்கு பசுமை தன்மை போய்விடும். அங்குள்ள நீர்நிலையும் பாதிக்கப்படும். வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால் ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் அதிகரித்துவிடும். எதிர்காலத்தில் அந்த புல்வெளி நிலம் மாயமாகிவிடும். அதனால் மாநில அரசு, எசரகட்டா புல்வெளி நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

எலகங்கா எம்.எல்.ஏ. என்ன சொல்கிறார்?
இதுகுறித்து எலகங்கா தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத் கூறியதாவது:- எசரகட்டா புல்வெளி நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு கோரி கர்நாடக வன உயிரினங்கள் வாரியம் அரசுக்கு வரைவு திட்டத்தை அனுப்பியுள்ளது. சில சுயநல சக்திகளின் அழுத்தத்திற்கு பணிந்து அந்த வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. அங்குள்ள எசரகட்டா, சிவகோட்டே, ஹுரளிசிக்கனஹள்ளி, அரகெரே, சொன்னேனஹள்ளி உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அந்த நிலத்தை பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் வன உயிரினங்கள் வாரியம் திடீரென இந்த வரைவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் பின்னணியில் சில சக்திகள் செயலாற்றி வருகின்றன. அந்த பகுதி கிராம மக்களின் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பல அமைப்புகளின் நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து அந்த வாரியத்திற்கு எதிராக புகார் அளித்தனர். எசரகட்டாவில் 350 ஏக்கர் புல்வெளி நிலத்தை பாதுாப்பதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. எனது தொகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது தான் எங்களின் முதன்மையான பணி. இந்த விஷயத்தில் யாரிடம் இருந்தும் நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை. புல்வெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தால் வேலை வாய்ப்புகள் உருவாகாது என்று அந்த பகுதி இளைஞர்கள் பயப்படுகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்கள் மீன் பிடித்து பிழைப்பு நடத்துகின்றன. அந்த குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும். அதனால் எசரகட்டா புல்வெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க கூடாது.இவ்வாறு எஸ்.ஆர்.விஸ்வநாத் கூறினார். பெங்களூரு பரபரப்பாக இயங்கும் நகரமாக உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் எந்திர வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றே சொல்லலாம். காலையில் எழுந்து வேலைகளை முடித்துவிட்டு அவசர அவசரமாக வேலைக்கு செல்வதும், மாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி விழிபிதுங்கி வீடு வந்து சேருவதும் ஒரு எந்திர வாழ்க்கையாகவே மாறிவிட்டது. மரங்களின் எண்ணிக்கை குறைந்து எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் தென்படுவதால், பெங்களூரு கான்கிரீட் காடாக தென்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சுமார் 200 ஏக்கரில் லால்பாக், 100 ஏக்கரில் கப்பன்பாக் பூங்கா உள்ளது. அது தான் நகரவாசிகளின் முக்கியமான பொழுதுபோக்கு பூங்காவாகவும், சுவாச (லங் ஸ்பேஸ்) பகுதியாகவும் உள்ளது. அதை விட்டால் பொிய பொழுது போக்கு பூங்கா என்று எதுவும் இல்லை. பெங்களூரு வேகமாக வளர்ந்து வருவதால் வரும் காலத்தில் எசரகட்டா பகுதியும் நகருக்குள் வந்துவிடும் நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் கண்களுக்கு ரம்மியமாக காட்சியளிக்கும் பசுமை போர்த்திய பகுதியாக உள்ள எசரகட்டா புல்வெளி பரப்பை பாதுகாத்தால் அது எதிர்காலத்தில் பெங்களூருவாசிகளின் மிகப்பெரிய “லங் ஸ்பேஸ்” அதாவது சுவாச மண்டலமாக பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

பெங்களூருவின் மிகப்பெரிய “லங் ஸ்பேஸ்”

133 வகையான பறவைகள்
எசரகட்டா புல்வெளி பரப்பில் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரி பகுதியில் 133 வகையான பறவை இனங்கள் வாழ்கின்றன. சில நேரங்களில் வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்வது உண்டு. அது மட்டுமின்றி 40 வகையான உள்ளூர் இன மர வகைகள், 400 வகையான பூச்சிகள், 100 வகையான பட்டாம் பூச்சிகள் இருக்கின்றன. அந்த புல்வெளி பரப்பில் அதிக ஏக்கரில் புல்வெளி பரப்பு உள்ளது. அந்த புல்வெளி பரப்பு கர்நாடக கால்நடைத்துறையின் கீழ் உள்ளது. கால்நடைத்துறையும், அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.