ஆந்திராவுக்கு ரெயிலில் சென்று கைவரிசை- 80 கொள்ளை வழக்கில் தொடர்புடைய பலே திருடன் கைது..!!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மலையூரை சேர்ந்தவர் விஜய் (வயது 48). இவர் வேலூர், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து பயணிகள் ரெயிலில் ஏறி சித்தூர் சென்று சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் சிவா, விஜய், வெங்கடேஷ் என பல்வேறு பெயர்களை வைத்துகொண்டு பூட்டிய வீடுகளை மட்டுமே நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பாகாலா, முத்தியால்பள்ளி, சந்திரகிரி சித்தூர், ராமச்சந்திராபுரம், திருப்பதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 80 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாகாலா ரெயில் நிலையத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் இருந்த விஜய் போலீசாரைக் கண்டதும் தண்டவாளத்தில் குதித்து தப்பி ஓடினர். இதனைக் கண்ட போலீசார் விஜயை துரத்தி சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் ஏற்கனவே கொள்ளை வழக்குகளில் சிக்கி 10 ஆண்டுகள் சிறைக்கு சென்று வந்து மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 334 கிராம் தங்க நகைகள், 570 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் லேப்டாப், 2 செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். திருவண்ணாமலையிலிருந்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து பயணிகள் ரெயிலில் சென்று தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்ததாக விஜய் தெரிவித்துள்ளார்.