கடற்தொழிலாளர்களின் பிள்ளைகளின் கடந்த 10 வருட பெறுபேற்றை கோரியுள்ள வடக்கு ஆளுநர்!!
கடற்தொழிலாளர்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகளை சமர்ப்பிக்குமாறு, வடமாகாண ஆளுநரின் கடிதத்துக்கமைய, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடற்றொழிலாளர்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகளை 2011இல் இருந்து 2021 வரை பகுப்பாய்வு செய்து டிசம்பர் 10ம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு, மற்றும் பெறுபேறுகள் குறைவடைதல் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை கோரியதாக தெரிவித்தார்.
எவ்வித இன, மத, சமூக பேதமும் இல்லாமல் பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கும் போது குறிப்பிட்ட சமூகத்தின் விபரங்களை மாத்திரம் திரட்டுவது மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை உருவாக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”