கோவாவில் வரும் 11ம் தேதி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!
கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி திறந்து வைக்கிறார் என அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார். இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது:- வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம், 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம், முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை ஆளும். தற்போதுள்ள டபோலிம் விமான நிலையம் ஒரு வருடத்தில் 85 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஆனால் புதிய விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கான வசதி இல்லை. பிரதமர் மோடி டிசம்பர் 11ம் தேதி கோவா வந்து மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை தொடங்கி வைக்கிறார். மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார். வடக்கு கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத் (உத்தர பிரதேசம்) தேசிய யுனானி மருத்துவக் கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.