யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.!! (PHOTOS)
யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (06.12.2022 ) காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது அரசாங்க அதிபர் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணை குறிக்கப்பட்ட கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக விநியோகக்கபட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு விவசாயிகள் நீர்ப்பம்பி ஊடான நீர் இறைப்புக்கும் , தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் மண்ணெண்ணை போதாமை உள்ளதாக கோரிக்கை முன்வைத்தனர் அது தொடர்பாக கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்க அதிபர் கூறினாா்.
உணவு பாதுகாப்பு, நெற் செய்கையில் பொட்டாசியம் குறைபாடு அது தொடர்பான விவசாயிகளுக்கான பயிற்சிகள், பாடசாலைகளில் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், நெற் செய்கைக்கைக்கான திரவ உர விநியோகம், சேதனப்பசளை விநியோகம், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய்
விநியோகம், உருளைக்கிழங்கு செய்கை பாதிப்பு ,விதை உற்பத்தி மற்றும் அடிப்படை விதைகளை வழங்குதல், விவசாயிகளுக்கான காப்புறுதி நடவடிக்கைகள், முட்டை உற்பத்தி, விலங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விதை அபிவிருத்திப் பிரிவினரால் 2022 ஆம் ஆண்டுக்கான யாழ். மாவட்ட சிறந்த விதை உற்பத்தியாளர்களுக்கான சான்றிதழ்களும் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின் தொடர்ச்சியாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் போசாக்கு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த பொறிமுறையின் மூன்றாவது முன்னேற்றக்கூட்டமும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமக்கு மிகையாக காணப்படும் உணவுகளை சேமித்து உணவு வங்கியை உருவாக்குதல் இதனூடாக நலிந்த மற்றும் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு உணவு வழங்குதல், வங்கிகள் ஊடாக விவசாயிகளுக்கு கடன் உதவிகளை வழங்குதல் போன்றவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், வங்கிகளின் பிரதிநிதிகள், வணிகர் சங்க தலைவர், கமநலஅமைப்புக்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.