தலித் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு திட்டங்கள் அமல்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்..!!
சமூக சமத்துவத்தை ஏற்படுத்த தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பு திட்டங்களை அமல்படுத்துவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
சவால்களுக்கு தீர்வு
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவின் முன் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவா் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்தில் காலத்திற்கு ஏற்ப சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அவற்றில் திருத்தம் செய்ய வகை செய்திருப்பது சிறப்பானது. ஜனநாயகம் எப்படி வெற்றி பெறும் என்பதை அவர் இந்த உலகிற்கு வெளிக்காட்டியுள்ளார். பல்வேறு மொழிகள், சாதிகள், பிராந்தியங்களை உள்ளடக்கிய நமது நாட்டில் ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி அதில் அனைவரின் உணர்வுகளையும் சேர்த்து அகண்ட பாரதத்தை உருவாக்கியதுடன் நீண்ட காலம் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைக்க செய்துள்ளார்.
அனுபவிக்க கூடாது
நமது நாட்டில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அம்பேத்கர் தான் காரணம். அவரது பணி எப்போதும் நிரந்தரமானது. அரசியல் அமைப்பு சட்டத்தின் விருப்பங்களான சமத்துவம், ஒற்றுமை, கூட்டாட்சி தத்துவம் போன்றவற்றில் மனிதநேயத்தையும் அவர் சேர்த்துள்ளார். அவர் பட்ட அவமானங்கள், வேதனையை பிறர் அனுபவிக்க கூடாது என்று கருதி அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு அதில் பாதுகாப்பு வழங்கி அந்த மக்களும் முன்னிலைக்கு வர வேண்டும் என்று விரும்பி அதற்கான அம்சங்களையும் சேர்த்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த வளர்ச்சியில் சமத்துவத்தை ஏற்படுத்த அவர் முக்கியத்துவம் அளித்தார்.
உறுதியேற்க வேண்டும்
கல்வி, அமைப்பு, போராட்டம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். நாம் அவர் வகுத்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது நமக்கு கிடைத்த புண்ணியம் ஆகும். அரசியல் அமைப்பு சட்டத்தின் விருப்பங்களை முழுமையாக நிறைவேற்ற நிர்வாகம், நிர்வாகத்தின் அங்கம், சமூகம் என அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
சமத்துவம், சமூகநீதியை வெறும் பேச்சால் செயல்படுத்த முடியாது. அம்பேத்கர் அதை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்த்தார். சமூக சமத்துவத்தை ஏற்படுத்த ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடியின மக்களுக்கு கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என அனைத்திலும் சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறோம். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம்.
கல்விக்கு முக்கியத்துவம்
அந்த மக்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் ரூ.29 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க 100 அம்பேத்கர் மாணவர் விடுதிகளையும், 500 கனகதாசர் விடுதிகளையும் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். கர்நாடகத்தில் அம்பேத்கர் வருகை தந்த 10 இடங்களை மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தொடங்கியுள்ளன. விகாச சவுதா முன் பகுதியில் ரூ.50 கோடியில் அம்பேத்கர் உத்வேக பவன் கட்டுகிறோம். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.