;
Athirady Tamil News

பிரித்தானியாவிடம் இருந்து ஒத்துழைப்பு!!

0

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக இலங்கை எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டுவதாகவும் அதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான ஒத்துழைப்புகளை வழங்க பிரித்தானியா எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென்றும் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லிசா வென்ஸ்டால் (Lisa Whanstall) தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவிற்கும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இலங்கையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு அவசியமான ஆகக்கூடிய ஆதரவை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் வாக்குறுதியளித்தார்.

இதேவேளை, இலங்கை புதுப்பிக்கத்தக்க சக்திக்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தை பாராட்டிய பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர், இது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அடித்தளமிடும் திட்டமென்றும் கூறினார்.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். அத்துடன் காலநிலை மாற்றம் தொடர்பிலான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவிருப்பதாகவும் கூறினார்.

காலநிலை மாற்றம் தொடர்பில் பிராந்தியத்தில் நிகழும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பிலான அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமெனக் கூறிய சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன இதன்மூலம் எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் ஏற்கனவே பசுமை ஹைட்ரஜன் வலுச்சக்தி தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேலும் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆலோசகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரித்தானிய அரசாங்கத்தின் செழுமைக் குழுத் தலைவர் அன்ட்ரூ பிரைஸ் (Andrew Price) மற்றும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புப் பணிப்பாளர் சஜன சூரியாரச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.