கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக (இன்று) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.