11 ஆம் திகதி வரை வட- கிழக்கில் கனமழை!!
வங்காள விரிகுடாவில் தோன்றி வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ‘மண்டாஸ்’ புயலானது தீவிர புயலாக மாறியுள்ளது. புயலின் தற்போதைய நிலையில் இதனால் இலங்கையின் எப்பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது. எனினும், எதிர்வரும் 11.12.2022 வரை வடக்கு மாகாணத்தின் முழுப் பிரதேசத்துக்கும், கிழக்கு மாகாணத்தின் முழுப் பிரதேசத்துக்கும் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது வடக்கு- வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து நாளை வெள்ளிக்கிழமை(09.12.2022) நள்ளிரவுக்கும் நாளை மறுதினம் சனிக்கிழமை (10.12.2022) காலைக்கும் இடையில் இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணத்துக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளையும், நாளை மறுதினம் காலை வரையும் இன்றுடன் ஒப்பிடும்போது காற்றின் வேகம் அதிகரித்தும் காணப்படும். கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-65 கி.மீ. வரையும் உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. வரையும் வீசும் வாய்ப்புள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.