யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் போட்டிகள்!!
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வடக்கின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக 29வது ஆண்டாக 2023 ம் ஆண்டு பாடசாலை விஞ்ஞானப் போட்டிகளை நடாத்தவுள்ளது.
ஜனவரி 4 முதல் பெப்ரவரி 24 வரை வடக்கில் உள்ள 12 கல்வி வலயங்களின் பாடசாலை மாணவர்களும் பங்கு கொண்டு பயன் பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.
போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில், அதன்படி முதலாம் பிரிவில் தரம் 6 முதல் 8 வரையும் இரண்டாம் பிரிவில் தரம் 9 முதல் 11வரையும் மூன்றாம் பிரிவில் தரம் 12 முதல்13 வரையும் என மூன்று பிரிவுகளாக கண்காட்சிப் போட்டி, சுவரொட்டி போட்டி பாடசாலைத் தோட்டப் போட்டி, ஆவணப்படப்ப போட்டி, வினாவிடைப்போட்டி, புனைகதைப் போட்டி, பேச்சுப் போட்டி, கைபேசி புகைப்படப் போட்டி என்பன இடம்பெறவுள்ளது.
போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பும் மாணவர்கள் பாடசாலை அதிபரைத் தொடர்பு கொள்ளமுடியும். ஒவ்வொரு வலயத்திலும் உள்ள விஞ்ஞான பாடத்திற்குப் பொறுப்பாக உள்ளவர்கள் ஆர்வமுள்ள மாணவர்களை போட்டியில் பங்குகொள்ள ஏற்பாடுகளைச் செய்வார்கள். விஞ்ஞானச் சங்கத்தின் போட்டிகளில் பங்கு கொள்ள எந்தவொரு கட்டணத்தையும்
செலுத்தத் தேவையிைல்லை. இலவசமாக போட்டியில் பங்கு கொள்ளலாம். போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்களை
https://www.thejsa.org இணையத்தளத்தில் காணலாம்.
போட்டிகளுக்கான அனுசரணையை ரட்ணம் பவுண்டேசன், வன்னி ஹோப் என்பன வழங்குகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிறப்பான தொடர்பாடலுக்கான மாற்று முறைமைகளை கண்டுகொள்ளல், சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், சக்திவள மேம்பாடு, கழிவுப் பொருள் அகற்றல், மீள்சுழற்சி, மீளுருவாக்கம், வீட்டுத் தோட்ட உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புக்கள், தொழில்நுட்பங்களைப் புரிந்து
கொள்ளுதல், விஞ்ஞான கற்பனையை வளர்த்தெடுத்தல், சமூகத்தை நுணுகி ஆராய்தல், சாதாரண வாழ்வியலிலிருந்து கற்றுக்கொள்ளுதல், இயற்கையைப் புரிந்து கொள்ளுதல், பொது அறிவை.வளர்த்தல், உலகின் கண்டுபிடிப்புக்களை புரிந்து கொள்ளுதல், குறிப்பாக விஞ்ஞானம் சார்ந்த அறிவை மேம்படுத்தல், உள்ளுர் அறிவுகளை கண்டு கொள்ளுதல், மேம்படுத்தல், மனிதர்களைப் புரிதல் போன்ற பல அறிவியல் சார்ந்த நோக்கங்களைக் கொண்டு எட்டு வகையான போட்டிகளை
யாழப்பாண விஞ்ஞானச் சங்கம் இந்த ஆண்டு நடத்தத் தீர்மானித்துள்ளது.
1991ம் ஆண்டு பேராசிரியர் துரைராஜாவின் முன்முயற்சியல் பல கல்வியாளர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்தார்கள். யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் ஆய்வுநிலைப்பட்ட சிந்தனைப்புலத்தை உருவாக்கும் முயற்சியில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விஞ்ஞான அறிவுப் போட்டிகளை நடத்தி சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கின்றது. அதே வேளை உயர்கல்வி மற்றும் புலமையாளர்கள் மத்தியில் விஞ்ஞான ஆய்வுகளை ஊக்குவிக்கும் பணியையும் மேற்கொள்கின்றது. அதனோடு, விஞ்ஞான அறிவை மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஒரு ஆரோக்கியமான
சமூகத்திற்காகவும் யாழ்ப்பாண விஞ்ஞானசங்கம் செயற்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் கோவிட் -19 தாக்கம் காரணமாக யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் செயற்பாடுகளில் பரந்தளவில்.மாணவர்கள் பங்குபற்றுவது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தததை
காண முடிந்தது.
இதன் காரணமாக நன்மையடையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. இதனால், சிறிய பெரிய நடுத்தரப்பாடசாலைகள் விஞ்ஞானச்சங்கத்தின் செயற்பாடுகளில் இணைந்து பயன்பெற வேண்டும் என்று விரும்புகின்றோம் என்றனர்.
ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத் தலைவர் க.சிறீகணேசன்,யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் சமூக விஞ்ஞான சங்கத் தலைவர் தே.தேவானந்த், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி
இ.சுரேந்திரகுமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”