இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றிய தலைவர் தெரிவு!!
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அண்மையில் (03) தெரிவுசெய்யப்பட்டார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்.
தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்மொழிந்ததுடன், அதனைப் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்ஹ மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் வழிமொழிந்தனர்.
அத்துடன், பிரதித் தலைவர்களாக மஞ்சுளா திசாநாயக்கவும், பிரேம்நாத்.சி தொலவத்த மற்றும் வீரசுமன வீரசிங்ஹ ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
இளைஞர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை சீர்செய்வதற்கு இந்த ஒன்றியம் எதிர்பார்ப்பதாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஹேஷா விதானகே தெரிவித்தார்.
நாட்டின் கொள்கை மற்றும் சட்டம் இயற்றல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க ஒன்றியத்தின் ஊடாக உரிய வேலைத்திட்டமொன்றை முன்மொழிய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இளைஞர் சமூகத்தின் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதுடன் அரசியல் கட்சிகளில் இளைஞர் பிரதிநிதிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்குவதுடன் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் போன்றவற்றிலும் இளைஞர் பிரதிநிதிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றக் குழுக்களில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் ஊடாகப் பாராளுமன்றத்தின் செயற்பாட்டிற்கு இளைஞர்களின் பங்களிப்பை வழங்குவதற்கான ஏற்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
ஒன்றியத்தின் எதிர்காலப் பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் பிரேரணைகளையும் சமர்ப்பிக்குமாறு தலைவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அரசியல் கட்சிகள் வேறுபாடின்றின் இந்த ஒன்றியத்தின் ஊடாக ஒட்டுமொத்த இளைஞர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் தேவைகளுக்காக கூட்டாக ஒன்றிணைந்து செயற்பட வேண்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர்.