இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர்: அமித்ஷா பெருமிதம்..!!
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- குஜராத்தில் பா.ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த அம்மாநில மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் வளர்ச்சி மாதிரி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையின் கீழ், குஜராத்தில் அனைத்து வளர்ச்சி சாதனைகளையும் பா.ஜனதா முறியடித்தது. தற்போது, பா.ஜனதாவை மக்கள் ஆசீர்வதித்து, அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கச் செய்துள்ளனர். இந்த அமோக வெற்றியால், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பா.ஜனதாவுடன் இருப்பது தெளிவாகிறது. இலவசம், வெற்று வாக்குறுதிகள் ஆகியவற்றை அளிக்கும் அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். மக்கள் நலனுக்காக பாடுபடும் மோடியின் பா.ஜனதாவுக்கு முன்எப்போதும் இல்லாத வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றிக்காக பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, முதல்-மந்திரி பூபேந்திர படேல், கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- குஜராத்தில் பா.ஜனதாவுக்கு கிடைத்த சரித்திர வெற்றி, வளர்ச்சி, நல்லாட்சி ஆகியவை மீது பா.ஜனதா கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த வெற்றிக்கான பெருமை, பிரதமர் மோடியின் தலைமை, அவரது புகழ், நம்பகத்தன்மை ஆகியவற்றையே சாரும். ஜே.பி.நட்டா, அமித்ஷா, பூபேந்திர படேல், சி.ஆர்.பட்டீல் ஆகியோரின் கடின உழைப்பால், பா.ஜனதா எல்லா சாதனைகளையும் முறியடித்து சரித்திர வெற்றி படைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.