மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து!!
ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதாது. எனவே மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அதிகாரம் அமைச்சருக்கும் அமைச்சரவைக்குமே இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான எம்.பிக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள காணிகளை பிரதேச செயலாளர் ஊடாகப் பகிர்ந்தளிப்பதுத் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் தொடர்பில் சபை யில் பேசப்படுகிறது. பிரதேச செயலாளர் தான் விரும்பியவாறு காணிகளை பிரித்துக்கொடுக்க முடியாது. இதற்கென குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதுபோல, அரச சார்பற்ற பல்கலைக்கழங்கள் அமைப்பதுத் தொடர்பில் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் தீர்மானத்துக்கு வரும்பட்சத்தில் ஜனவரிக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களை அமைக்க முடியும்.
மின்சாரக் கட்டணம் கடந்த ஓகஸ்ட் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதுபோதாது. இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபாய் நட்டமடைய உள்ளது. 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 300 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அடுத்த வருடம் வழமையான மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. அடுத்த வருடம் சாதாரணமாக மழைப் பெய்யுமாக இருந்தால் 352 பில்லியன்களும், அதிகள மழை பெய்து வெள்ளம் நிலைமைகள் ஏற்பட்டால் 295 பில்லியன்களும் தேவைப்படுகிறது.
அரசாங்கத்துக்கென வருமானம் இல்லாத நிலையில் இந்த பாரிய நிதியை எவ்வாறுப் பெற்றுக்கொள்வது? நாணயத்தாள்களை மீள அச்சிடுவதா? அப்படியென்றால் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். இல்லை வற் வரியை அதிகரிகப்பதா? வற் வரியை அதிகரித்துக்கொண்டிருந்தால் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து அதிகரிக்கும்.
எனவே, மூன்றாவதாக எமக்குள்ள ஒரே தீர்வு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே. மின்கட்டணத்தை அதிகரிக்காது மின்சாரத் துண்டிப்புகளுக்கு செல்லலாம். ஆனால், அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கல்வில் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைகள் நடைபெறும். எனவே மின்துண்டிப்புக்கு செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.