நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி!!
தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து படிப்படியாகக் குறைவடையும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளி நாளை காலை புயலாக மாறி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது.
இதன் காரணமாக இலங்கையின் வடக்கில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவியதோடு சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியது.
மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தினால் பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வீசிய கடும் காற்றினால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டங்களில் 1,305 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மூன்று உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.
உடப்புஸ்ஸல்லாவை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 55 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதேபோன்று நுவரெலியா – ராகலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 54 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் 1,302 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.