அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துங்கள் – பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்..!!
உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டம் முசோரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது அவர் இளம் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:- இளம் அதிகாரிகளாகிய நீங்கள் கனவு காணும் இந்தியாவை நனவாக்கும் நிலையில் இருக்கிறீர்கள். சிவில் சர்வீசஸ் என்பது நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு பாதை ஆகும். இது ஒரு கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை, இதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறீர்கள். சிறந்த குணநலன்கள்தான் உயர்ந்த நற்பண்பு என்று கூறும் அகாடமியின் பொன்மொழியை எப்போதும் உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும். நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது உங்கள் அரசியலமைப்பு பொறுப்பு மற்றும் தார்மீக கடமை ஆகும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் கொள்கைகளை உருவாக்கும் செயல்பாட்டில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கப்போகிறீர்கள். ஏழைகள், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் தேவைகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் இலக்கை அடைவீர்கள். அனைத்து பிரிவினரும் இணைந்து செயல்பட்டால்தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும்.
பருவநிலை மாற்றம்
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை முழு உலகமும் சந்தித்து வரும் ஒரு பிரச்சினையாக இருக்கின்றன. இத்தகைய சவாலை சமாளிக்க பயனுள்ள நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். எனவே, அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு சிவில் சர்வீசஸ் பணியாளராக உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் செய்ய விரும்புவதை பட்டியலிடுங்கள். அதை 25 ஆண்டுகளுக்கு பிறகு உங்களால் திறக்கப்படும் வகையில் பெட்டி ஒன்றில் வைத்திருங்கள். 2047-ல் அதை திறக்கும் போது, உங்கள் இலக்குகளை அடைந்துவிட்ட திருப்தி ஏற்படும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.