காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஆம் ஆத்மி: குஜராத்தில் வியக்க வைக்கும் புள்ளி விவரங்கள்..!!
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:- சவுராஷ்டிரா பகுதியில் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. அங்கு மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 40 இடங்களை பா.ஜ.க. தன்வசப்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்த பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை பெற்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு இந்தப் பகுதியில் 4 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசை விட ஒரு இடம் ஆம்ஆத்மிக்கு கூடுதலாக கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. சமாஜ்வாடி வேட்பாளர் காந்தல் ஜடேஜா குட்டியானா தொகுதியில் வெற்றிக்கொடி கட்டி இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு சவுராஷ்டிரா பகுதியில் 48.23 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரசுக்கு 26 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 20 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. காங்கிரசின் வீழ்ச்சிக்கு ஆம் ஆத்மி இங்கு வழிவகுத்துள்ளது.
2017 தேர்தலில் காங்கிரசுக்கு 45.37 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 44.90 சதவீத வாக்குகளும் கிடைத்தன. கடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அதன் பலத்தை 99 இடங்களுடன் காங்கிரஸ் கட்டுப்படுத்தியது என்றால், அதற்கு பட்டிதார் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகள் கை கொடுத்ததுதான் காரணம் ஆகும். இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் டிக்கெட் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
மத்திய குஜராத், நகர்ப்புறங்கள்…
மத்திய குஜராத் பகுதியில் பா.ஜ.க. 61-ல் 56 இடங்களைப் பிடித்துள்ளது. 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி 8 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது. 5 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மது ஸ்ரீவஸ்தவ் சுயேச்சையாக வகோடியா தொகுதியில் களம் இறங்கினார். இங்கு பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வின் படேல் தோற்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆமதாபாத், வதோதரா, நாடியத், உம்ரெத், மட்டார் நகர்ப்புறங்களிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வடக்கு குஜராத்தில் 32 இடங்களில் 22 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றுள்ளனர். கடந்த 2017 தேர்தலில் இந்தப் பகுதியில் காங்கிரசுக்கு 17 ‘சீட்டு’களும், பா.ஜ.க.வுக்கு 14 ‘சீட்டு’களும் கிடைத்தன.
வாரிச்சுருட்டிய பா.ஜ.க.
தெற்கு குஜராத்தில் 35 இடங்களில் 33 இடங்களில் பா.ஜ.க. வென்றிருக்கிறது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது. சூரத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களையும் அப்படியே பா.ஜ.க. வாரிச்சுருட்டி விட்டது. கட்ச் பகுதியிலும் இதே கதைதான். 6 இடங்களையும் பா.ஜ.க. அள்ளியது. காங்கிரஸ் கட்சி இருந்த 2 இடங்களையும் இழந்துள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாத போதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது.
ஆம் ஆத்மி திருப்தி
ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஆம் ஆத்மிக்கு 5 இடங்களே கிடைத்தாலும், அதில் அந்தக் கட்சி திருப்தி அடைந்துள்ளது. இதுபற்றி அதன் மாநில தலைவர் கோபால் இடாலியா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் கட்சி குஜராத்தில் பா.ஜ.க.வின் கோட்டையில் குறிப்பிடத்தக்க அளவில் நுழைந்து இருப்பதே வெற்றிதான். இது கெஜ்ரிவாலின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி” என குறிப்பிட்டார். ஆனால் இவரும் சூரத்தில் உள்ள கட்டார்காம் தொகுதியில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.