காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரித்ததற்கான காரணம்!!
உலக நாடுகள் முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எமது நாட்டையும் பாதிக்கும் என்பதனை உணர்ந்ததன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “காலநிலை செழுமைத் திட்டத்தை” தயாரித்ததாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.
நாட்டின் வளிமண்டலத்தின் தரம் கடந்த இரண்டு நாட்களாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் ருவன் விஜயவர்தன, இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட அறிவித்தலொன்றை முன்வைத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
ருவன் விஜயவர்தன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…….
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைக் காரணமாக வட இந்தியாவில் நிலவி வரும் வளி மாசடைதல் பிரச்சினைக்கு நமது நாடும் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறலாம் என்பதை ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததன் காரணமாகவே , அவர் காலநிலை மாற்றம் குறித்த கருத்தாடல் ஒன்றை ஆரம்பித்தார்.
வளி மாசடைதல் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் விவசாயத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அலுவலகப் பணியாளர்கள் வருகையிலும் வீழ்ச்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றது. அதன் காரணமாகவே ஜனாதிபதி பசுமைப் பொருளாதாரம் பற்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 மாநாட்டில் இதைப் பற்றி கலந்துரையாடினோம். அதற்கமைய காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஒன்றை இந்நாட்டில் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை மிக விரைவில் செய்வோம். உலகிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளின் செயல்பாடுகளால் நம்மைப் போன்ற சிறிய நாடுகளே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி COP 27 மாநாட்டிலும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடு என்ற வகையில் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பாரிய சவால் காலநிலை மாற்றம் என்பதனாலேயே ஜனாதிபதி இது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஜனாதிபதி அன்று இதைப் பற்றிப் பேசியபோது சிரித்த பலர், இன்று யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.