போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட 394 கிலோ வெள்ளை பவுடர்: என்ன தெரியுமா?
ராமேஸ்வரம் அருகே வேதாளை மீனவ கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்ட வெள்ளை நிற பவுடர் என்னவென்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரம் தீவு பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில், அந்த வெள்ளை பவுடர் அதிக விலைக்காக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த விவசாய உரம் என்று கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலம் சமையல் மஞ்சள், கஞ்சா, கடல் அட்டை, விவசாய உரம், கடல் குதிரை உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் ரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து உரம் கடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தனுஷ்கோடி வழியாக இலங்கைக்குப் படகில் பொருட்கள் கடத்தல்
ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகு மூலம் கடத்தல் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு (மரைன் போலீசார்) கிடைத்த ரகசிய தகவலையடுத்து வியாழக்கிழமை இரவு வேதாளை கடற்கரையில் மரைன் போலீசார் மறைந்திருந்தனர்.
அப்போது தோளை கடற்கரை சாலையில் வந்த சொகுசு கார் ஒன்று கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக வெகு நேரம் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த மறைந்திருந்த மரைன் போலீசார் அந்த சொகுசு காரை மடக்கி சோதனை செய்த போது காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனில் வெள்ளை நிறத்தில் பவுடர் அடைக்கப்பட்ட 30 தண்ணீர் கேன்களில் 394 கிலோ பவுடர் காருக்குள் இருந்தது.
கெமிக்கல் பவுடர் குறித்து காரில் இருந்தவர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த மரைன் போலீசார் காரில் இருந்த இருவரையும், கெமிக்கல் பவுடர் மற்றும் காரை பறிமுதல் செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காருக்குள் திமுக முன்னாள் இன்னாள் கவுன்சிலர்கள்
காரில் இருந்தவர்கள், கீழக்கரை சங்குளிகாரத் தெருவை சேர்ந்த ஜெயினுதீன், சர்பராஸ் நவாஸ் என்பதும் சர்பராஸ் நவாஸ் கீழக்கரை 19வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்டுள்ள கெமிக்கல் பவுடர் செடிகளுக்கு இடும் அடி உரம், இதை நாட்டுப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக சொகுசு காரில் கொண்டு வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வெள்ளை நிற பவுடர், போதை பவுடர் அல்லது வெடி மருந்தாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய விசாரணை மறுநாள் மாலை வரை நடைபெற்றது.
இரண்டு நாட்களாக மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் உள்ள இருவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, சட்ட ஒழுங்கு காவல்துறை, சுங்கத்துறை, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்று அனைத்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஆனால் வெள்ளை நிற பவுடர் குறித்து முறையான தகவல் ஏதும் கிடைக்காததால் மரைன் போலீசார் மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் திணறினர்.
துப்பு கிடைக்காமல் திணறிய காவல்துறை
மரைன் போலீசார் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளிலுள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வெள்ளை நிற பவுடரை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் அந்த பவுடர் போதைப் பொருளா அல்லது விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உரமா என உறுதியான அறிக்கை கிடைக்கவில்லை.
இதையடுத்து சென்னையில் உள்ள தலைமை தடய அறிவியல் துறைக்கு வெள்ளை நிற பவுடரின் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அதை ஆய்வு செய்ததன் அடிப்படையில் வெள்ளை நிற பவுடர் போதைப் பொருள் இல்லை. அதில் ஸ்டார்ச், சர்க்கரை மட்டும் உள்ளன. இந்த வெள்ளை நிற பவுடரை கொண்டு உரம் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
பின்னர் மரைன் காவல் நிலையத்தில் வெள்ளை பவுடர் அடைக்கபட்ட 30 தண்ணீர் கேன்கள், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இருவர் மற்றும் காரை மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத் துறையினரிடம் மரைன் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்தி தாள்கள், சமூக வலைதளங்களில் பரவிய இந்த செய்தியை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
‘ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை அருகே திமுக கவுன்சிலரிடம் இருந்து பிடிபட்ட ரூ.360 கோடி மதிப்புள்ள கடத்தல் போதைப் பொருளின் முழு விவரத்தைக் கண்டறிய, உடனடியாக இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்’ என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக வலியுறுத்தினார்.
பாஜக அண்ணாமலை ட்வீட்
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்கக் காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினர் உதவுவதால் தான்.
மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கு உள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு. அடுத்த முறை போதைப் பொருட்களின் ஒழிப்பைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த போது சிக்கிய தன் கட்சிக்காரரைக் குறிப்பிடுவார் என்று நம்புவோம்’ எனப் பதிவிட்டிருந்தார்.
இலங்கைக்கு கடத்த இருந்த விவசாய உரம்
வேதாளையில் தண்ணீர் கேனில் பிடிபட்ட வெள்ளை பவுடர் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடலோர பாதுகாப்புக் குழும கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் புதன் கிழமை மாலை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 28ஆம் தேதி இரவு 8 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத் தெருவைச் சேர்ந்த சர்பராஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கு இடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கு இடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதைப்பொருளோ வெடி மருந்தோ இல்லையென்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேற்படி நபர்கள் விவசாய உரத்தை மிக அதிக பண மதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்ப இருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச் செயல் சுங்கத்துறை சட்ட மீறலின் கீழ் வருவதால் மேற்படி நபர்கள் இருவரும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.