கடும் போட்டி நிலவுவதால் இமாச்சல பிரதேச முதல்வரை பிரியங்கா காந்தி அறிவிக்கிறார்: காங்கிரஸ் மேலிடம் தகவல்..!!
இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த பாஜகவுக்கு 25 தொகுதி கிடைத்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதால் அங்கு புதிய முதல்வராக பதவி ஏற்க போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ராஜீவ் சுக்லா, பூபேந்தர் ஹூடா, பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வரை பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா அறிவிக்கிறார். இதை கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியங்கா தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி பெற்ற முதல் வெற்றி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதீபா சிங், சுக்வீந்தர் சிங், முகேஷ் அக்னி கோத்ரி, ராஜீந்தர் ரானா ஆகிய 4 பேரது பெயர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பிரதீபா சிங்குக்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது.