பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மிகப் பெரிய சவால்- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பேச்சு..!!
டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது. கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல். பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள் என்ற தங்க விதியே, மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது. அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அது தார்மீகக் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.