நாக்பூரில் தேசிய சுகாதார நிறுவனம்- பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!!
பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனம் அமைக்கப்படுகிறது. மனிதர்களைத் தாக்கும் அறியப்படாத நோய்களைக் கண்டறிவதுடன், அதனைக் கட்டுப்படுத்துவதிலும், இந்த நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தும். இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிறுவனம் சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் முக்கிய மைல்கல் திட்டமாக இருக்கும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரத்த சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சரி செய்வது தொடர்பாக நாக்பூரில் அமைக்கப்படும் மத்திய ஆராய்ச்சி மையத்தையும் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அதிகமாக இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையிலும் இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவர், அத்துறையின் செயலாளர் டாக்டர் ராஜீவ் பால் உள்பட பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.