மகான்களின் போதனைகளால் இந்தியா நிலைத்து நிற்கிறது- கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் பேச்சு..!!
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது சங்கராச்சாரியார், ரிஷிகள் போன்ற துறவிகளின் போதனைகளால் இந்தியா தற்போதும் உயிர்ப்புடன் நிலைத்து நிற்கிறது. இந்திய நாகரிகம் பழமையானது மட்டுமல்ல, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது, அது தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, பல்கலைக்கழக நியமன விவகாரத்தில் கேரள அரசின் தலையீடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆரிப் முகமதுகான் கூறியுள்ளதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என உச்சநீதிமன்றமே சமீபத்தில் தெரிவித்து உள்ளது. அப்படியிருக்க இந்த பிரச்சினையில் கேரள அரசு எப்படி தலையிட முடியும்? தங்களால் முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். பல்கலைக்கழகம் பொது பட்டியலில் உள்ளது. பல்கலைக்கழகங்களின் மீதான தனி அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அப்படியிருக்கும் போது மாநில அரசு எப்படி ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க முடியும்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.