இலங்கை அதிகாரிகள் குழு ஓமான் பறந்தது!!
ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் இடம்பெற்ற ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (11) ஓமானுக்கு புறப்பட்டனர்.
இந்தக் குழுவில் பணியகத்தின் மேலதிக பொது முகாமையாளர், சீஐடியின் மூன்று விசாரணை அதிகாரிகள், ஒரு பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஒரு பெண் துணைப் பரிசோதகர் ஆகியோர் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கைப் பெண்களை சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து அவர்கள் அங்கு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
இதனையடுத்து, ஆட்கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் வெளியானதுடன், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.