;
Athirady Tamil News

ஒற்றையாட்சி தீர்வு அர்த்தமற்றது – சி.வி.விக்னேஸ்வரன்!!

0

“ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ஜனாதிபதி, அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்த பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி அல்லது கூட்டு சமஸ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது.

3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது.

அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது. ஆனால், தீர்வு தொடர்பில் ஜனாதிபதி உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்டன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும்.

இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன். இந்த பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்த கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.