மொட்டுவின் பெரும்பான்மையை வீழ்த்த 10 எம்.பிக்களே தேவை!!
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் கிடைத்து வரும் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துள்ளது என்பது நிரூபணமாவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, விரைவிலேயே அரசாங்கத்தின் பெரும்பான்மையை வீழ்த்துவோம் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடு வங்குரோத்தடைந்துள்ளது. வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. அதுபோல நாட்டில் தொழில் வாய்ப்புகள் குறைவடைந்துள்ளன. ஆனாலும் அரசாங்கம் அடக்குமுறைகளை நிறுத்தியப்படில்லை. இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாரியப் பொறுப்புள்ளது.
நாட்டுக்கு இழைத்த நாசகர செயற்பாடுகளால் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை என ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் மக்கள் பலவந்தமாக வௌியேற்றியிருந்தார்கள். ஆனால், மக்களால் வௌியியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மக்களின் குரலுக்கு செவிமெடுக்காது மக்கள் ஆணைக் கிடைக்காத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதியாக்கினார்கள் என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்ததும் வௌிநாட்டில் இருந்து நிவாரணங்கள் கிடைக்கும் வரிசைகள் இல்லாது போகும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். திருடர்களால் திருடப்பட்டப் பணத்தை மீளக் கொண்டுவருவார் எனவும் எதிர்பார்த்த நிலையில், இவை எதனையும் செய்யாத ரணில் மக்களிடம் வரிச் சுமையை, எரிபொருளின் விலை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றையும் அதிகரித்துள்ளார் எனவும் கூறினார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது. இவ்வாறான, எல்லை நிர்ணயம், இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் என கூறி தேர்தலை அரசாங்கம் காலந்தாழ்த்த சதி செய்கிறது எனவும் குற்றஞ்சுமத்தினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடந்தால் அதில் எமக்கேப் பாரிய வெற்றிக்கிடைக்கும். ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த 69 இலட்ச வாக்குகளில் 10 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 55 இலட்ச வாக்குகள் கிடைத்தன. ஏனையக் கட்சிகளுக்கும் 2 – 3 இலட்ச வாக்குகள் கிடைத்தாலும் அக்கட்சிகளால் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளைப்போல பெற முடியாது.
அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துள்ளது என்பது பாராளுமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு 151 வாக்குகளையும், இடைக்கால ஜனாதிபதி தெரிவின்போது 134 வாக்குகளும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருந்தன. ஆனால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்துக்கு வெறும் 123 வாக்குகளே கிடைத்துள்ளன. எனவே அரசாங்கத்துக்குள்ள பெரும்பான்மை பலத்தை இழப்பதற்கு இன்னும் 10 வாக்குகளே இல்லாது செய்யப்பட வேண்டும். எதிர்க்கட்சியில் உள்ள ஏனையக் கட்சிகளுடன் இணைந்து நாம் அவற்றை செய்வோம் எனவும் தெரிவித்தார்.