தமிழகத்தின் கலை, இலக்கியத்தை பிரபலப்படுத்த வேண்டும்- மத்திய மந்திரி வலியுறுத்தல்..!!
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்க கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாக்கூர், கூறியுள்ளதாவது: காசி தமிழ் சங்கமத்தை முன்னெடுத்த பிரதமருக்கு நன்றி, பிரதமரின் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500 பேர் காசிக்கு வருகின்றனர். காசிக்கு வந்த 2500 பேர், 25000 சுற்றுலாப் பயணிகளை மீண்டும் காசிக்கு அழைத்து வருவார்கள். எனவே இது ஆரம்பத்தான். காசி தமிழ் சங்கமம் பற்றி இதற்கு முன்பு யாரும் யோசிக்கவில்லை. காசியுடன் தொடர்புடைய தென்காசி உள்பட தமிழகத்தில் ஏராளமான ஊர்கள் உள்ளன. இந்த தொடர்புகள் பிரதமரால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. காசியுடன் தொடர்புடைய தமிழக பகுதிகளுக்கு உத்தரபிரதேச மக்கள் செல்ல வேண்டும். தமிழகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பிரபலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.