ஜி20 நாடுகள் சபை பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம்: பெங்களூருவில் நாளை தொடங்குகிறது..!!
ஜி20 நாடுகள் சபையில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஆண்டு அந்த சபைக்கு தலைமை பதவியை வகிக்கும். கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி இந்தோனேஷியாவில் நடைபெற்ற அந்த நாடுகளின் உச்சி மாநாட்டில், ஜி20 நாடுகள் சபை தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த தலைமை பதவியை இந்தியா கடந்த 1-ந் தேதி முறைப்படி ஏற்றுக்கொண்டது. அந்த நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு தலைமை பதவியை இந்தியா நிர்வகிக்கும். இந்த ஜி20 நாடுகள், உலகின் மொத்த பொருளாதாரத்தில் 80 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்த நாடுகளில் மக்கள்தொகை, உலகின் மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் உள்ளது. இந்த ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு(2023) செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த நாடுகளின் பல்வேறு மட்டத்திலான அதிகாரிகள் கலந்து கொள்ளும் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன.
உயர்மட்ட கூட்டம்
இந்த 200 கூட்டங்களில் 14 கூட்டங்களை கர்நாடகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லிக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஜி20 நாடுகள் சபையின் நிதி மற்றும் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகளின் முதல் உயர்மட்ட கூட்டம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தை மத்திய அரசின் நிதித்துறையும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து நடத்துகிறது. மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அஜய் சேத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பாத்ரா, ஜி20 நாடுகளின் நிதித்துறை இணை மந்திரிகள், மத்திய வங்கிகளின் துணை கவர்னர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் உலக பொருளாதார பிரச்சினைகள், உலக பொருளாதாரத்தை சூழ்ந்துள்ள நிலைகள், சர்வதேச நிதியியல் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் நிதி, நிலையான நிதி, உலக சுகாதாரம், சர்வதேச வரி விதிப்பு முறைகள், நிதி உள்ளடக்கம் உள்ளிட்ட நிதித்துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.