‘நிலையான வளர்ச்சிதான் தேவை: ‘குறுக்கு வழி அரசியல் வேண்டாம்’ – பிரதமர் மோடி..!!
மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். மராட்டிய கவர்னர் பகத் சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டோர் முன்னிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- மராட்டியத்தில் இரட்டை என்ஜின் அரசின் வேகத்துக்கு இன்றைய விழா, ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த சம்ருத்தி விரைவுசாலையானது, நாக்பூர்-மும்பை இடையேயான தொலைவைக் குறைப்பதுடன், மராட்டியத்தின் 24 மாவட்டங்களை நவீன இணைப்புகளுடன் இணைக்கிறது. இது விவசாயத்துக்கும், பல்வேறு மதத்தினரின் வழிபாட்டுத்தலங்களுக்கும், தொழில்துறைக்கும் மாபெரும் நன்மையாக அமையப்போகிறது. இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாக்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி, மாறுபட்ட உள்கட்டமைப்பு வசதியாக அமைந்துள்ளது. சம்ருத்தி விரைவு சாலை திட்டம், மற்றொரு விதமான உள்கட்டமைப்பு வசதி ஆகும். அதே போன்று, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாக்பூர் மெட்ரோ ரெயிலும், வெவ்வேறு வகையான பயன்பாட்டு உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும். ஆனால் அவை அனைத்துமே ஒரு மலர்க்கொத்தின் வெவ்வேறு பூக்கள் மாதிரிதான். அவற்றின் வளர்ச்சி என்னும் வாசம், பெருந்திரளான மக்களைப் போய்ச்சேரும்.
‘குறுக்கு வழி அரசியல் வேண்டாம்’
கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் எல்லோரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மனநிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். இங்கே நாக்பூரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையைக் கொண்டுள்ளன. இங்கே தொடங்கிவைக்கப்பட்டுள்ள 11 வளர்ச்சித்திட்டங்களும் மராட்டியத்தின் ஆபரணங்கள் ஆகும். வரிசெலுத்துவோரின் பணத்தைக் கொள்ளையடித்து, பொய்யான வாக்குறுதிகளுடன் குறுக்கு வழி அரசியல் செய்கிறவர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி, குறுக்கு வழி அரசியல் மூலம் வந்து விடாது. நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம். நிலையான வளர்ச்சிதான் தேவை.
உள்கட்டமைப்பில் கவனம்…
சில அரசியல் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க முயற்சிக்கின்றன. அத்தகைய அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் நாட்டு மக்கள் அம்பலப்படுத்த வேண்டும். குறுக்கு வழி அரசியலைக் கைவிட்டு, நிலையான வளர்ச்சியின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று நான் அரசியல் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அப்படி செய்கிறபோது நீங்கள் நிலையான வளர்ச்சியுடன் தேர்தல்களில் வெற்றி பெற முடியும். எங்கள் அரசானது, எதிர்காலத்துக்கான முழுமையான, நவீன உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார். பிரதமர் மோடி சம்ருத்தி விரைவுசாலையை தொடங்கி வைத்ததுடன் 10 கி.மீ. தொலைவுக்கு காரில் பயணம் மேற்கொண்டார். இந்த விரைவுசாலைக்கு ‘பாலாசாகேப் தாக்கரே மராட்டிய சம்ருத்தி மகாமார்க்’ என பெயரிடப்பட்டுள்ளது. 701 கி.மீ. தொலைவிலான இந்த சாலையில் முதல் கட்டமாக 520 கி.மீ. தொலைவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது