யாழ். பல்கலைக்கழக நடனத் துறை அனுமதியில் மோசடி என பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு!!
யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் நடனத்துறைக்குப் புதிய மாணவர்களை உள்வாங்குவதற்காக நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் (2021) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று, நுண்கலைப்பாடங்களில் விசேட திறமை உள்ளவர்களை உள்வாங்குவதற்கான தெரிவுப் பரீட்சைகள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்படுவது வழமையாகும். அவ்வாறு யாழ். பல்கலைக்கழக நடனத் துறையினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையிலேயே முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2022 – 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளிவந்துள்ள நிலையில், திறமையான பல மாணவர்கள் நுண்கலை நடனத் துறை அனுமதியில் தெரிவுசெய்யப்படாமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, நுண்கலைப் பாடங்களுக்கான தெரிவு அந்தந்தப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சைகளின் அடிப்படையில், மாணவர்கள் பெற்ற இசற் ஸ்கோர் புள்ளி ஒழுங்கில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகங்களின் தெரிவு என்பது மாணவர்கள் குறித்த பாடத்தில் வெளிப்படுத்திய அடைவு மட்டங்களின் அடிப்படையில் அமையும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தேவைப்பாட்டின் அடிப்படையில், தேசிய ரீதியிலான சாதனைகள் பெற்ற மற்றும் பிரபல பாடசாலைகளின் ஆசிரியர்களிடம் பயின்ற பல மாணவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
நடகத்துறை விரிவுரையாளர்களின் இத்தகைய செயற்பாடு குறித்து துணைவேந்தரை நேரடியாகச் சந்தித்துத்து முறைப்பாடு செய்யபோதிலும், நடனத்துறையினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வழங்குமாறு கோரி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரிடமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடுகள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”