யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது.!! (வீடியோ)
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டது.
கொரோணா பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்ட யாழ்பாணம் சர்வதேச விமான நிலையமே இன்றையதினம் மீளத் திறக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் இன்று காலை 11.20 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதன்போது விமானத்தில் வந்த விருந்தினர்கள் மற்றும் பயணிகளுக்கு பாரம்பரியமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ் விமான சேவையின் மூலம் பயனிகள் குறைந்த நேரட்செலவில் பயணிக்க முடியும் என்பதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் பாரிய வருவாயை ஈட்டித்தருவதாக உள்ளது.
மேலும் விமான நிலையத்தினை சூழ உள்ள மக்களின் வாழ்வாதாரம் அதிகரிப்பதோடு அதனைச் சூழ உள்ள பிரதேசங்களும் அபிவிருத்தியடையக்கூடியதாக உள்ளது.
இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.
வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு தினங்களுக்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது.
கடந்த நல்லாட்சிக் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
சர்வதேச வாயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது: டக்ளஸ் மகிழ்ச்சி!!
மீண்டும் ஆரம்பமானது யாழ் சர்வதேச விமான நிலைய சேவை – சற்று முன்னர் தரையிறங்கியது முதல் விமானம்!